

சென்னை: தென் சென்னை மகளிருக்கு மாதவிடாய் குப்பி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
மத்திய அரசின் எச்எல்எல் லைப்கேர் நிறுவனம் மற்றும் என்வி நிறுவனம் ஆகியவை இணைந்து மகளிரிடையே மாதவிடாய் குப்பி பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு இலவசமாக மாதவிடாய் குப்பிகளை வழங்குதல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தை தென் சென்னை மக்களவை தொகுதியில் செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் தொடக்க விழா, தென் சென்னை எம்.பி. அலுவலகம் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள மந்த்ரா கார்டன் அரங்கில், எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று 15 மகளிருக்கு மாதவிடாய் குப்பிகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:
இத்திட்டத்தின் கீழ் தென் சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 6 வார்டுகளை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அதில் நகரமயமான பகுதியில் உள்ள 750 பெண்கள், கிராமப்புறமாக இருக்கும் பகுதியிலிருந்து 750 பெண்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு மாதவிடாய் குப்பிகளை வழங்க இருக்கிறோம்.
இந்த மாதவிடாய் குப்பிகள், சானிடரி பேடுகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும். அதை சுத்தம்செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். விலைமலிவானது. இதை பயன்படுத்துவதன் மூலம் சானிடரி பேடு குப்பைஉருவாவது, அதனால் ஏற்படும் சுகாதாரக்கேடுகளும் குறைகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. அதன் மூலம் மகளிரின் மாதவிடாய் சுகாதாரமும் மேம்பாடு அடைகிறது.
இத்திட்டம் குறித்து தென் சென்னை தொகுதியில் கடலோரப் பகுதிகளான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நொச்சிகுப்பம், பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், நைனார்குப்பம், உத்தண்டி, அக்கரை, பனையூர் ஆகிய இடங்களில் மகளிர் மத்தியில் அடுத்த 3 மாதங்களுக்கு, மாநகராட்சியுடன் இணைந்து, கவுன்சிலர்கள் ஆதரவுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இத்திட்டத்துக்காக என்வி நிறுவனம், தனது சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
5 ஆண்டுகளுக்கு... இந்நிகழ்ச்சியில் பேசிய எச்எல்எல் நிறுவன இயக்குநர் அனிதா தம்பி, ``இந்த குப்பிகளை மீண்டும், மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் பிறகு அதைத் தூக்கி எறிந்தாலும், எளிதில் மக்கிவிடும் தன்மை கொண்டது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் கூட'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், மயிலை வேலுஎம்எல்ஏ, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், என்வி நிறுவனத் தலைவர் வீர வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.