Published : 15 Sep 2023 06:17 AM
Last Updated : 15 Sep 2023 06:17 AM

சென்னை விஐடியில் நவீன வசதி தொடக்கம்

சென்னை விஐடியில் நடந்த அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி வசதி தொடக்க விழாவில், இந்தியாவுக்கான மியான்மர் தூதர் மோ கியாவ் ஆங்-க்கு விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் நினைவுப் பரிசு வழங்கினார்.

சென்னை: சென்னை விஐடியில் அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி வசதி (Scanning Electron Microscope Facility) தொடக்க விழா நடைபெற்றது. இந்தியாவுக்கான மியான்மர் தூதர் மோ கியாவ் ஆங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இவ்வசதியை தொடங்கிவைத்தார். விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், மியான்மர் கவுரவ தூதர் பேராசிரியர் ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தனது வாழ்த்துரையில், “இந்தியா-மியான்மர் இடையேயான தொடர்பு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. விஐடி தர வரிசையில் முன்னணியில் இருப்பதற்கு ஆராய்ச்சியில் மாணவர்களும், பேராசிரியர்களும் சிறந்து விளங்குவது முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.

ஆராய்ச்சி மாணவர்கள் விஐடியின் முதுகெலும்பாக விளங்கி வருகின்றனர். ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் விஐடியில் செய்து தரப்பட்டுள்ளது” என்றார்.

இந்தியாவுக்கான மியான்மர் தூதர் மோ கியாவ் ஆங் பேசுகையில், “இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில், விஐடி உலகத் தரம் வாய்ந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. மியான்மர்-விஐடி இணைந்து கல்வித் துறையில் மேலும் வளர்ச்சியை அடைய வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், சென்னை விஐடியின் இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும்பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x