

மதுரை: பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவதுதான் சனாதன தர்மம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
பெரியார் பிறந்த நாளையொட்டி மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த சமூக நீதி பெருவிழா நடந்தது. கோவை சட்டக் கல்லூரி மாணவி சினேகா, மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர் இளையவளவன் ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், திமுக நிர்வாகி அழகுபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: அரசியல் அமைப்பின் முகப்புரை என்ன சொல்கிறது என விரிவாக பேசுவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம். இது பற்றி விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். இதற்கு எதிரானது சனாதனம்.
உலகம் முழுவதும் ஜனநாய கத்துக்கும், பாசிசத்துக்கும் இடையே யுத்தம் நடக்கிறது. பாசிசத்தை புரிந்து கொண்டால் தான் சனாதனம் குறித்து தெரிந்து கொள்ள முடியும். சனாதன தர்மம் என்பது பிராமணர், ஆரியர்கள் சொல்லும் பெயர். நமது வாழ்வியல் எப்போது தோன்றியது என யாராலும் சொல்ல முடியாது. வேதத்துக்கும், பூர்வீக குடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மனுச் சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது தான் சனாதன தர்மம். இவ்வாறு அவர் பேசினார்.