

கடலூர்: பரங்கிப்பேட்டை பகுதியில் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இங்கு சைமா சாயத் தொழிற்சாலையை அனுமதிக்க மாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கடலூர் மக்களவைத் தொகுதிவாக்குச்சாவடி களப் பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து, கர்நாடகா அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். தமிழகத்தில் பால், நெய் விலையை அரசு 5-வது முறையாக உயர்த்தியுள்ளதை கண்டிக்கிறோம். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிக ரித்து வருகிறது.
இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது காற் றாலை, சூரிய ஒளி மூலமாக 36,000மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. ஆனால் என்எல்சி மூலமாக 800 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பசுமையான நிலத்தை அழித்து மின்சாரம் பிற மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் நெல் உற்பத்தியில் 4-வது மாவட்டமாக இருந்து வருகிறது. என்எல்சி நிர்வாகம் 65 ஆயிரம் ஏக்கர் நிலத்தை குத்தகையாக பயன்படுத்தி வருகின்றனர். விவசாயத்தை பாது காக்க இந்த குத்தகையை ரத்து செய்யஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்எல்சி நிறுவனம் 3-வது சுரங்கத்துக்கு ரூ.3,700 கோடி ஒதுக்கி உள்ளது.
இதன் மூலம் 26 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த உள்ளனர். இதில் 9 கிராமங்கள் காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளன. ஆனால் என்எல்சி நிர்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. மண், மக்கள், விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பாமக செயல்பட்டு வருகிறது.
கடலூர் சிப்காட் பகுதியில் வசிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக தற்போது ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சைமா தொழிற்சாலை மூலமாக பரங்கிப்பேட்டை பகுதியில் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாயக் கழிவுகளை பைப் மூலமாக கடலூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு அதை சுத்திகரித்து கடலில் விடப்போவதாக தெரிய வருகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கடலூர் மாநகரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரியை ரூ.115 கோடியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது.
இதில் ஊழல் நடைபெறுவதால், தமிழக அரசு உரிய முறையில் ஆய்வு நடத்த வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மது விலக்கு கொண்டு வரப்படும் என முதல்வர் கூறியது என்ன நிலையில் உள்ளது எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.