

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அறுவடை நேரத்தில் பெய்து வரும் சாரல் மழையால் 2,000 ஏக்கருக்கு மேல் விளைந்த நெற்பயிர்களை கரைசேர்க்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
நாஞ்சில்நாடு என போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10,000 ஹெக்டேருக்கு மேல் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது.2,000-ம் ஆண்டுக்கு பின்னர் இவற்றில் பெரும்பாலான விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட நிலையில் மாற்று பயிர் சாகுபடியில் பல விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால் நெல் சாகுபடி பரப்பு 6,500 ஹெக்டேராக குறைநத்து. நடப்பாண்டு பாசன நீர் விநியோகத்தில் குளறுபடியால் 5,500 ஹெக்டேரில் மட்டுமே நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் குளத்து பாசனத்தின் மூலம் பயன்பெறும் சுசீந்திரம், பறக்கை, பூதப்பாண்டி, இறச்சகுளம் பகுதியில் உள்ள வயல்களில் நெல் அறுவடை பணி ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. கால்வாய்கள் தூர் வாரிய பின்னர் தாமதமாக தண்ணீர் விநியோகம் செய்ததால் வில்லுக் குறி, ஆளூர், இரணியல் போன்ற பகுதிகளில் அறுவடை பணிகள் மேலும் ஒருமாதம் தாமதமாகும் நிலையில் உள்ளது.
சாரல் மழையால் தவிப்பு: அதே சமயம் குளத்துபாசனம், ஆற்றுப்பாசனம் ஆகியவற்றின் மூலம் நெல் நடவு செய்யப்பட்ட 2,000 ஏக்கர் வயல்களில் தற்போது அறுவடை நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. வயல்வெளிகளில் நெற்பயிர்கள் விளைந்து பொன்னிறத்தில் காட்சியளிக்கிறது.
கடந்த 3 வாரங்களாக குமரி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழையால் இவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். குமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் நெல் விவசாயம் மட்டுமின்றி தென்னை, வாழை, ரப்பர் உட்பட அனைத்துவித பயிர்களும் கருகும் நிலைக்கு சென்றன.
ஆற்றுப்பாசன விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் நெற்பயிர்களை பராமரித்து வந்தனர். சாரல் மழை விட்டு விட்டு பெய்வதால் ராம்சார் குறியீடு பெற்ற வேம்பனூர் வயல் ஏலா, திருப்பதிசாரம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள வயல்களில் விளைந்த நெய்பயிர்களை அறுவடை செய்ய முடியவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
இது குறித்து வேம்பனூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘தற்போதைய சூழலில் வேளாண்மை தொழில் மீதுள்ள ஆர்வத்தால் தான் நெல் விவசாயம் செய்து வருகிறோம். கணக்கு பார்த்தால் நஷ்டம் தான் மிஞ்சும். சாதாரண தொழிலாளி ஒருவர் வாங்கும் சம்பளம் கூட 6 மாத காலம் பாடுபட்டு பயிரிடப்படும் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி மூலம் கிடைப்பதில்லை.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் இருக்கும் வயல்களை விற்று பணமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல விவசாயிகள் வாழை, மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு மாறிவிட்டனர். மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் விளைவித்த நெற்பயிர்கள் திருப்தி தரும் வகையில் அதிக நெல்மணியுடன் உள்ளது. ஆனால் சாரல் மழையால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
சாரல் மழைக்கு மத்தியில் அவ்வப்போது வெயிலடிப்பதை பயன்படுத்தி அறுவடை செய்யும் பட்சத்தில் சிறு தூறல் வந்தால் கூட நெல்மணிகள் ஈரமாகி தரம் குன்றும் சூழ்நிலை ஏற்படும். இதனால் உரிய விலைக்கு விற்க முடியாமல் நஷ்டம் ஏற்படும். இதை சரிகட்டும் வகையில் இனி வரும் காலங்களிலாவது குளறுபடி இன்றி சாகுபடி நேரத்தில் பாசன நீர் விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.