

நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
களியக்காவிளை உட்பட கேரள எல்லை பகுதிகளில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீஸாருடன் இணைந்து சுகாதார பணியாளர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்கின்றனர். கேரளாவில் இருந்து ரயில்கள் மூலம் கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் என ஏராளமானோர் குமரிக்கு வரக்கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராமங்கள்,
பேரூராட்சிகள், நகராட்சிகள் வாரியாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை, மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
காய்ச்சல் பாதிப்பால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தில் டெங்கு சிகிச்சைக்காக தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை தனி வார்டில் சிகிச்சைக்காக சேர்த்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.