Published : 15 Sep 2023 10:21 AM
Last Updated : 15 Sep 2023 10:21 AM

ஊதியமில்லா உழைப்புக்கு உயரிய அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! #TNEmpowersWomen

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண் சமூக விடுதலையில் திராவிட இயக்கத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. பாலின சமத்துவம், பெண் கல்வி, பெண்ணுரிமைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்த தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணாவுக்கு பின்னர், ஆட்சி பொறுப்புக்கு வந்த மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பெண் கல்வி, பெண்ணுரிமை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

திமுக ஆட்சிக் காலங்களில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம் என பெண் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

அதேபோல், இந்தியாவிலேயே முதன்முறையாக 1973-ல் காவல்துறையில், மகளிரை நியமித்தது திமுக ஆட்சியில்தான். மேலும், உள்ளாட்சித் தேர்தல்களில் 50 சதவீத இடஒதுக்கீடு, திருக்கோயில்களின் அறங்காவலர் குழுவில் பெண் ஒருவர் கட்டாயமாக இடம்பெறச் செய்தது, 1990ம் ஆண்டில், பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம், அரசின் தொழில்மனைகளில் பெண்களுக்கு 10 சதவீத மனைகளை ஒதுக்கீடு செய்தது, இரண்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் முற்றிலும் பெண்களை ஆசிரியர்களாக நியமிக்க 1997ல் அரசாணை வெளியிட்டது, அரசுத் துறைகளில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியது, ஏழை விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குதல், மகளிர் சிறு வணிக கடன் திட்டம், என மகளிர் மேம்பாட்டுக்காக ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

அந்தவகையில், அனைத்துத் தரப்பினர் நலனையும், பாதுகாத்து வருகின்ற திராவிட மாடல் அரசாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முதல், சமூக மேம்பாட்டுக்காக சமூக நீதியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு வருகிறது. அந்தத் திட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஏழை, எளிய பெண்களின் மாதாந்திரச் செலவில் குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தி வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி வரும் விடியல் பயணத்திட்டம், பெண்கள் உயர்கல்விக்கு செல்வதை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டம், பள்ளிகளுக்கு வரக்கூடிய குழந்தைச் செல்வங்கள் பட்டினியுடன் வரும் இந்த செல்வங்களுடைய பசியை ஆற்றி வரக்கூடிய காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்கள் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்: அதில் திமுக அரசின் மிக முக்கியமான திட்டமாகவும், ஊதியமில்லா உழைப்புக்கு உயரிய அங்கீகாரம் அளிக்கும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் பார்க்கப்படுகிறது. இந்தியாவையே எதிர்பார்த்து காத்திருக்கும் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தமிழகம் முழுமைக்கும் காஞ்சிபுரத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் பார்க்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகள்... - தமிழக அரசின் மிகப்பெரிய திட்டம் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் ஆண்டு முழுவதும் பெறப் போகிறார்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற ஜூலை 24 முதல் ஆக.4 வரை முதல் கட்டமாகவும், ஆக.5 முதல் ஆக.14 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு ஆக.18 முதல் ஆக.20 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யவும் அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

உயரிய அங்கீகார திட்டம் - ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, தமிழக முதல்வரின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், நிச்சயம் ஊதியமில்லா உழைப்புக்கு உயரிய அங்கீகாரமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இது உரிமைத் தொகை மட்டுமல்ல, உயிர்த் தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எவ்வித அங்கீகாரமும் பொருளாதாரப் பலனும் இல்லாத வீட்டு வேலைகளில் மூழ்கிக் கிடக்கும் குடும்பத் தலைவிகளுக்கான திட்டமாக திகழ்கிறது இந்தத் திட்டம். இது குடும்பத்தலைவிகளின் குடும்பப் பணி களுக்காக அரசு தரும் ஊதியமாகவும் அங்கீகாரமாகவும் இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மானுட விடுதலை சாத்தியமில்லை’ என்றார் லெனின். பெண்களை வீட்டு வேலைகளில் இருந்து விடுவிப்பதோடு பெண்களின் ‘குடும்பக் கடமை’களுக்கு அங்கீகாரத்துடன் பொருளாதர மதிப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டியது கடமை என்பதை உணர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவது இந்தத் திட்டத்தின் மகத்துவம் எனலாம்.

இந்தத் திட்டத்தை மற்ற நலத் திட்டங்களைப் போல ‘பணப்பயன்’ திட்டமாகப் பார்க்கக் கூடது. இதில் வழங்கப்படும் தொகை முக்கியமல்ல. அது வழங்கப்படும் நோக்கமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் வீட்டில் ‘சும்மா’ இருக்கிறார்கள் என்கிற உண்மைக்குப் புறம்பான வறட்டுக் கற்பிதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டமாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

குடும்பத்தலைவிகளின் ஊதியமில்லாப் பணிகளையும் அவற்றின் அவசியத்தையும் அரசு அங்கீகரிக்கிறது என்பதாகத்தான் பொருள்கொள்ள வேண்டும். அரசு அளிக்கிற ஆயிரம் ரூபாயில் பெண்கள் அனைவரும் பொருளாதாரத் தன்னிறைவை அடைந்துவிட முடியாது. ஆனால், அவர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் தருகிற சிறுதொகை, ஆண்கள் மத்தியில் அவர்களின் இருப்பையும் மதிப்பையும் சிறுகச் சிறுக உயர்த்தும். ஒவ்வோர் அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டியதும் இதைத்தான் என்பதை மெய்ப்பிக்கிறது தமிழக அரசு.

#TNEmpowersWomen

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x