Published : 12 Dec 2017 08:49 PM
Last Updated : 12 Dec 2017 08:49 PM

திருநின்றவூரில் பல்பொருள் அங்காடியில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞர் கைது: கூட்டாளிக்கு போலீஸ் வலை

திருநின்றவூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து ரூ.8000 மதிப்புள்ள 4 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதானவரின் கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை, திருநின்றவூர், தாசர்புரத்தில் வசிப்பவர் ஜெபராஜ்(46) இவர் திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்தி வருகிறார். இன்று (12.12.2017) காலை 9  மணியளவில் இவரது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை கடையின் உரிமையாளர் ஜெபராஜிடம் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த ரூபாய்த்தாளை பார்த்து சந்தேகமடைந்த ஜெபராஜ் 2,000ஆயிரம் ரூபாய் நோட்டை சோதனை செய்ததில் அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இளைஞரிடம் பேச்சுகொடுத்து அவரை அமரவைத்து விட்டு ஜெபராஜ் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் பெயர் பாபு உசேன்(33) என்பதும், பட்டாபிராம் ஜெயராமன் நகரில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 4 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் பாபு உசேனின் கூட்டாளி அலீம் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவரை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பாபு உசேன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x