Published : 14 Sep 2023 05:43 AM
Last Updated : 14 Sep 2023 05:43 AM

அரசுப் பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.126 கோடி மானியம் ஒதுக்கீடு

கோப்புப்படம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.126.45 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,447 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் வளாகப் பராமரிப்பு செலவினங்களுக்கு, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு சார்பில் மானியம் அளிக்கப்படும்.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) மத்திய அரசின் நிதி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழியாக தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 9,709 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 9,727 பள்ளிகளில் 1 முதல் 30 எண்ணிக்கையிலான மாணவர்களே படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா ரூ.10 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 31 முதல் 100 மாணவர்கள் வரை பயிலும் 14,040 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், 101 முதல் 250 வரை மாணவர் எண்ணிக்கையுள்ள 8,918 பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரமும் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 251 முதல் 1,000 மாணவர்கள் வரை பயிலும் 4,249 பள்ளிகளுக்கு தலா ரூ.75,000, ஆயிரம் பேருக்கு மேலுள்ள 513 பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.126.45 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: இந்தத் தொகை, அந்தந்தப் பள்ளியின் மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இவற்றை பள்ளியின் சுகாதாரப் பணிகள், கற்றல் உபகரணங்கள் கொள்முதல் உட்பட அவசிய தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்த நிதியின் பயன்பாட்டு செலவினங்களை அறிக்கையாக இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்ட சுற்றறிக்கையின்படி 9,727 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 30-க்கும் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் சுமார் 400 ஆரம்பப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர் இருப்பதாகவும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே சேர்க்கை குறைய காரணம் எனவும் கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x