

சென்னை: காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ள நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1 அனுப்பி சரிபார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக 10 ஆயிரம் பயனாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.
இதற்காக கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து பயனாளிகள் வருவார்கள் என்பதால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் சிவ சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் வருகையை முன்னிட்டு, சுற்றுலா மாளிகை வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. சாலைகள், பேருந்து நிழற்குடைகள் ஆகியவையும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
நாளை இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின், இதில் பயன்பெற தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு ஏடிஎம் கார்டையும் வழங்குகிறார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் நடவடிக்கை தற்போது தொடங்கியுள்ளது.
இதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1-ஐ அனுப்பி, குறுஞ்செய்தி வாயிலாக பயனாளிக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், சம்பந்தப்பட்ட கணக்குக்கு அந்த தொகை சரியாக செல்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசால் அனுப்பப்படும் தொகை, தவறான வங்கிக் கணக்குக்கு சென்றுவிட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கைபேசி மூலம் பயனாளிகளை தொடர்பு கொண்டு தொகை பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டு வருகிறது.