

சென்னை: காவிரியில் தண்ணீர் திறக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசுக்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடிவீதம் 15 நாட்களுக்கு 6.25 டிஎம்சிதண்ணீர் திறந்துவிட வேண்டும் எனகாவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு,கர்நாடக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால் அதையும் தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது எனகர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் அறிவித்துள்ளனர்.கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க இயலாது என அம்மாநிலத்தின் துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இது எந்த விதத்திலும் நியாயமானதல்ல. இனியும் இரட்டைவேடம் போடாமல் தமிழக அரசு, உச்ச நீதி மன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து தமிழகத்துக்கான நீரை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
கே.எஸ்.அழகிரி கருத்து: இதற்கிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடிநீர் திறக்க வேண்டும் என்று காவிரிஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள் ளது. ஆனால் கர்நாடக காங்கிரஸ் அரசு நீர் திறக்க மறுத்துள்ளதை கண்டிக்கிறேன். ஆனால் நீர் திறக்கஎதிர்ப்பு தெரிவிக்கும் அம்மாநில பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு தமிழக பாஜகவினர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.
மேகேதாட்டு அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கியதும் கர்நாடக பாஜக அரசு தான். காவிரி பிரச்சினைக்கு அடிப்படை காரணம் கர்நாடக பாஜக அரசும், மத்தியபாஜக அரசும்தான். இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் பொறுமையாக, அறிவுப்பூர்வமாக அணுகுகிறார். நாங்கள் சட்டத்தை நம்புகிறோம். தமிழகத்துக்கு காவிரி நீர் வந்தே தீரும்’’ என்றார்.