Published : 14 Sep 2023 05:41 AM
Last Updated : 14 Sep 2023 05:41 AM

கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் அளவிட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் அளவிட வேண்டும் என்று தமிழக நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் வலி யுறுத்தி உள்ளார்.

கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில்அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், இன்று (செப்.13) முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீரைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். அதன்பின்,எங்களுக்கு ஒரே தீர்வு உச்சநீதிமன்றத்தை நாடுவது மட்டுமே. இந்த விவகாரம் தொடர்பாக, வரும் 21 -ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு வருகிறது. அதன்பின் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப் படும்.

தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுத்து நிச்சயம் நிவாரணம் வாங்கிதருவோம். இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் சட்ட ரீதியான நடவடிக் கைகள் வலுவிழக்கும்.

கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும். இவ்விவகாரத்தில் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ளகாங்கிரஸ் கட்சியை திமுக வலியுறுத்த வேண்டும் என்பது அவசிய மில்லை. அது எங்களை கெடுக்கும் வேலை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்.5-ம் தேதி அளித்த இறுதி ஆணை, உச்ச நீதிமன்றத்தின் 2018பிப்.16-ம் தேதி அளித்த தீர்ப்பு ஆகியவற்றின்படி, தண்ணீர் பற்றாக்குறைஆண்டுகளில் நீரை சம்பந்தப்பட்டமாநிலங்கள் குறைபாடு விகிதாச்சாரத்தின்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மைக் குழுமம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, 2018 ஜூன் முதல் இவ்வமைப்புகள் நடைமுறையில் உள்ளன.

உச்ச நீதிமன்ற ஆணை மீறல்: தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், மழை அளவு குறைந்து இருப்பினும், கர்நாடக அணைகளின் நீர் இருப்புமற்றும் நீர்வரத்தைக் கணக்கில்கொண்டு இரண்டு அமைப்புகளும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவை குறைபாடு விகிதாச்சாரத்தின்படி கணக்கிட்டு, அந்த அளவைவிட குறைவாகவே வழங்க 5 நாட்களுக்கு ஒருமுறை உத்தரவிட்டு வருகின்றன. அதையும் அளிக்க கர்நாடகா மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகத்தான் கருத்தில்கொள்ள வேண்டும்.

கடந்த 12-ம் தேதி நிலவரப்படி, கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர்இருப்பு 63.801 டிஎம்சி. மேலும், செப்டம்பர் மாதத்தில் வானிலை ஆய்வு மைய அறிக்கைப்படி மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன்மூலம் சுமார் 10 டிஎம்சிக்கு மேல் செப்டம்பரில் கிடைக்கும்.

இதுதவிர, வடகிழக்குப் பருவ மழைக் காலத்திலும், இந்த 4 அணைகளுக்கு குறைந்தது 30 டிஎம்சி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த சூழலில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கர்நாடக அணைகளில் இருந்து செப்.13-ம் தேதி முதல்15 நாட்களுக்கு, விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் 6.48 டிஎம்சி தண்ணீர் அளிக்க உத்தரவிட்டுள்ளது. பற்றாக்குறை விகிதாச்சாரப்படி பார்த்தாலும் இது மிகக் குறைவுதான். ஆனால், இந்த அளவு தண்ணீரைக் கூட அளிக்க முடியாது என கர்நாடகஅமைச்சர் கூறுவது நியாயமல்ல.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஓராண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு6.75 டிஎம்சி மட்டுமே. இதற்காக காவிரியிலிருந்து எடுக்க வேண்டிய நீரின் அளவு 33.75 டிஎம்சி என்றாலும், அதில் குடிநீர் பயன்பாட்டுக்குப் பிறகு காவிரிப் படுகையில் கர்நாடகா அளிக்க வேண்டிய நீர் 27டிஎம்சி ஆகும். நிலைமை இவ்வாறுஇருக்க, குடிநீர்த் தேவை என்ற போர்வையில் கர்நாடகா தண்ணீர் தர மறுப்பது, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

ஒரு மூத்த கர்நாடக அமைச்சர் இரு மாநில விவசாயிகளின் நலன்களைக் கருதாமல், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர்வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகளின் நலனைப்பாதிக்கக் கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்ச நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை குறித்து எடுத்துரைத்து, திறம்பட வாதாடி, காவிரியில் தமிழகத்துக்கான நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x