Published : 14 Sep 2023 05:22 AM
Last Updated : 14 Sep 2023 05:22 AM

நிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்: தமிழகத்துக்கு அச்சுறுத்தல் இல்லை என சுகாதார அமைச்சர் தகவல்

தேனி மாவட்டம் குமுளி மலையடிவாரம் லோயர்கேம்ப் பகுதியில் கேரளாவில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு மருத்துவ சோதனை செய்யும் சுகாதாரத் துறையினர்.

சென்னை/நெல்லை/கோவை: கேரள எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் நிபா வைரஸ் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. தமிழகத்துக்கு நிபா வைரஸ் அச்சுறுத்தல் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2018, 2021-ம் ஆண்டுக்கு பின், அம்மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லை மாவட்டங்களில், கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த, அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கேரள எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் அவசியம் ஈடுபட வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்த முழு தகவல்களையும் பெற்று, பொது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தென்காசி, குமரி எல்லையில்..: இதையடுத்து, தென்காசி மாவட்ட எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் சுகாதாரத் துறையினர் 3 குழுக்களாக தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.

வாகனங்களில் வருவோரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, களியக்காவிளை, கோழிவிளை, காக்காவிளை, பளுகல் மற்றும் நெட்டா ஆகிய 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து சோதனை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகப்படும் நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக பரிசோதனைக்காாக புனேவுக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேனி, கோவை: இதேபோன்று, தேனி மாவட்டம் குமுளி மலையடிவாரம் லோயர்கேம்ப் பகுதியில் வாகனங்களில் வருவோரிடம் சுகாதாரத் துறையினர் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை - பாலக்காடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வாளையாறு சோதனைச்சாவடியில் ஒரு மருத்துவர் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் வரும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வதோடு, வாகனங்களின் எண்களையும் பதிவு செய்கின்றனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள மீனாட்சிபுரம், கோபாலபுரம் சோதனைச்சாவடிகளிலும் 3 பேர் அடங்கிய குழுவினர் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபான்று, திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கேரளாவில் இருந்து வருவோர், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அமைச்சர் தகவல்: தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பாக எவ்வித அச்சமும் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தை பொறுத்தமட்டில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

15 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பு: நிபா வைரஸ் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வவ்வால் மற்றும் பறவைகளின் சிறுநீர், உமிழ் நீர்மற்றும் எச்சம் மூலம் மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. சிவந்த கண்கள், காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி, தசை வலி, வாந்தி, மஞ்சள் காமாலை, தோலில் தடிப்பு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

கேரள மாநில எல்லைப் பகுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் 15 நாட்களுக்கு மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் இருப்பார்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, காய்ச்சலின் தன்மை கண்காணிக்கப்படும்.மக்களிடையே சுய பாதுகாப்பு முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x