தமிழக அரசை கண்டித்து மறியல்: கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் கைது

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜை, கர்நாடக மாநில போலீஸார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜை, கர்நாடக மாநில போலீஸார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
Updated on
1 min read

ஓசூர்/ஈரோடு: கர்நாடக எல்லையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

‘கன்னட சலுவாலி வட்டாள் பக்‌ஷா’ அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காவிரியில் தண்ணீர் கேட்கும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சாலையில் அமர்ந்தனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கிழித்தனர். இதையடுத்து, கர்நாடக மாநில போலீஸார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.

மறியல் காரணமாகத் தமிழக எல்லையான ஜுஜுவாடியில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அங்கு ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாளவாடி அருகே ஆர்ப்பாட்டம்: தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, தமிழக - கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்யராஜ் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்துக்கு மேல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 38 விவசாயிகளை, சாம்ராஜ்நகர் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in