Published : 05 Dec 2017 09:31 AM
Last Updated : 05 Dec 2017 09:31 AM

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, அதிமுகவினர் அமைதிப் பேரணி சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இந்த ஓராண்டில் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது, பிரிந்திருந்த முதல்வர் கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்துள்ளனர்.

அமைதி ஊர்வலம்

ஆனால், சசிகலா, டிடிவி. தினகரன் தலைமையில் ஒரு குழுவினர் தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை 10:00 முதல் 10:30 மணிக்குள் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்படுகின்றனர்.

இதில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதிமுகவினர் உறுதிமொழி

இதை முன்னிட்டு, வாலாஜா சாலையில் 10 அடிக்கு ஒரு வரவேற்பு பேனர் அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சமாதியின் முன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்கின்றனர்.

அதேபோல், காலை 11 மணிக்கு தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் செல்கின்றனர். அவர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

மேலும், ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்துகிறார். இதுதவிர பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x