Published : 22 Dec 2017 10:03 AM
Last Updated : 22 Dec 2017 10:03 AM

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்- ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என கருணாநிதி கருத்து

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

2ஜி வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ நீதிமன்றம் நேற்று விடுவித்தது. நேற்று காலை 10.40 மணி அளவில் தீர்ப்பு வெளியானதும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காலை 11.30 மணி அளவில் அறிவாலயம் வந்தார். பட்டாசு வெடித்து அவரை தொண்டர்கள் வரவேற்றனர். காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். 11.45 மணிக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவாலயம் வந்தார்.

பின்னர், இருவரும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். 1.10 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு, கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந் தித்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘2ஜி வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்ட செய்தியை கருணாநிதியிடம் தெரிவித்தோம். எங்கள் இருவரது கைகளையும் பற்றிக்கொண்டு மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என ஒரு வரியில் கருத்து தெரிவித்துள்ளார்’’ என்றார். ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என கருணாநிதி கைப்பட எழுதிய கருத்து முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவியது. கோபாலபுரம் பகுதி, மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கனிமொழியின் இல்லம், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, காசிமேடு உட்பட தமிழகம் முழுவதும் திமுகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x