

சேலம்: சேலம் அருகே விபத்தை ஏற்படுத்தி, நிற்காமல் சென்ற லாரியை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு, காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
சேலம், சங்ககிரி, மோடிக்காடு என்ற இடத்தில் அதிக பாரத்துடன் வைக்கோல் ஏற்றிக் கொண்டு, விருத்தாசலத்திலிருந்து - திருச்செங்கோட்டுக்கு சென்ற லாரி, எதிரே செம்மறி ஆடுகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை உரசி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஆடுகளை வாகனத்தில் ஏற்றி வந்த பழனி (47) என்பவரது இடது கையில் ரத்தக் காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டது.
ஆட்சியர் கார்மேகம் ஆய்வுப் பணிக்காக சங்ககிரிக்கு சென்ற போது, இந்த விபத்து சம்பவத்தை நேரில் பார்த்தார். உடனடியாக ஆட்சியர் கார்மேகம் விபத்து குறித்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற லாரியை, தனது வாகனத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, ஓட்டுநர் மணிகண்டனை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
உடனடியாக விபத்தில் காயம் அடைந்தவர்களை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியதுடன், காயம் அடைந்தவருக்கு ஆறுதலும் கூறினார். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.