Published : 13 Sep 2023 04:57 AM
Last Updated : 13 Sep 2023 04:57 AM
சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு கடந்த ஆண்டைப் போல்இந்த ஆண்டும் தரமான, சுவையான இனிப்பு வகைகளைத் தயாரித்துவிற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம்வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இப்பாலைப் பதப்படுத்தி, ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்களில் அடைத்து ஆவின் விற்பனைசெய்கிறது. இதுதவிர, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.
இந்நிலையில், நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்புவகைகள், கார வகைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள் ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு பண்டிகைக் காலங்களில், நெய் பாதுஷா, நட்ஸ்ஹல்வா, காஜூ பிஸ்தா ரோல், நெய்அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்ஸர்உள்ளிட்டவற்றை தயாரித்து, தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.
இதன்மூலமாக, ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதேபோல, இந்தாண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில், இனிப்பு, காரவகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ளதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன. புதிய வகை இனிப்புவகைகளைத் தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதேநேரத்தில், கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், ஏற்கெனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT