

சென்னை: பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, அனைத்து இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது:
பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீது அவ்வப்போது நீதிமன்றங்களும் சில உத்தரவுகள் மற்றும்வழிகாட்டுதல்களை பிறப்பிக்கின்றன. அவற்றுக்குஉரிய முன்னுரிமை அளித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
அதன்படி பள்ளிக்கல்வித் துறை சார்ந்து நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றஉத்தரவின் நகலை பெற்றவுடன் முதலில் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து அரசின் சட்ட அதிகாரியிடம் கருத்தை பெறுவது கட்டாயமாகும். மேல்முறையீடு செய்யாதபட்சத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் மீதான நடவடிக்கைகள் குறித்த தகவலை துறை சார்ந்த அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நீதிமன்ற உத்தரவுகளை மீறுதல்,அவமதித்தல் போன்ற செயல்களில்ஈடுபடக்கூடாது. மேலும், அனைத்து அலுவலகங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.