Published : 13 Sep 2023 05:02 AM
Last Updated : 13 Sep 2023 05:02 AM
சென்னை: பிளஸ் 2 இந்தியப் பண்பாடு பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்தவிவரங்கள் இடம் பெற்றுள்ள விவகாரம் தற்போது சர்ச்சையாகி யுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் சனாதன தர்மம் குறித்துபேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறுதரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சனாதன தர்மம் தொடர்பான தகவல்கள் பள்ளி பாட புத்தகத்திலும் இடம்பெற்றுள்ள விவரம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் மாநில பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட பிளஸ் 2 வகுப்பில் ‘அறவியலும் இந்தியபண்பாடும்' என்ற பாடப்புத்தக்கத் தில் தான் சனாதன தர்மம் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அந்த புத்தகத்தில் இந்திய பண்பாடும் சமயங்களும் என்ற பாடத்தில் இந்து எனும் சொல்லின் பொருள் என்ற தலைப்பின் கீழ், ‘இந்து சமயம், சனாதன தர்மம், வேத சமயம், வைதீக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில்...: சனாதன தர்மம் என்றால், அழிவில்லாத நிலையான அறம் எனப்படும். இது வேதங்களை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் வேத சமயம் என்றும், வேத நெறிகளையும், சாத்திரங்களையும் மையமாககொண்டுள்ளதால் வைதீக சமயம் என்றும் அழைக்கப்படுகிறது'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடப்புத்தக்கம் 2019-ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியின் போது வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை கருத்து: இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு ஆகியோரின் கருத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்களைப் பெற்றனர். அதன்பின் இந்து மத மும் சனாதன தர்மமும் வேறு என்று அவர்கள் கூறினர்.
இந்த நிலையில் சனாதன தர்மமும், இந்து மதமும் ஒன்றே என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், சனாதன தர்மமே அழிவில்லாத அறம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர்கள் சேகர் பாபு,உதயநிதி ஸ்டாலின் இந்த வகுப்பில் சேர்ந்து சனாதன தர்மம் குறித்து போதனையை பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT