பொதுமக்கள் தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது; தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணி தீவிரம்: தமிழக அரசு அறிவிப்பு

பொதுமக்கள் தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது; தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணி தீவிரம்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள் ளக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.தாழ்வான பகுதிகள், தெருக்கள்,சாலைகளில் மழைநீர் தேங்குவதால், சுத்தமான தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறுவன் உயிரிழப்பு: டெங்குவின் தீவிரத்தால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தான். சென்னையில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்தசம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக அரசின்தலைமை செயலாளர் சிவ் தாஸ்மீனா தலைமையில் டெங்கு மற்றும்தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறையை சார்ந்த செயலாளர்கள், துறை சார்ந்த இயக்குநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

தமிழகத்தில் மொத்தம் 2,972அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து தினசரி, காய்ச்சல் கண்டவர்கள் அறிக்கை பெறப்பட்டு, கிராம, நகர வாரியாக பட்டியல் தயார் செய்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அன்றே அனுப்பப்பட்டு வருகிறது.

கொசுப்புழு தடுப்பு பணி: டெங்கு காய்ச்சலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 21,307 தினசரி தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு கொசுப்புழு தடுப்பு பணிகளை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். தென்மேற்கு பருவமழை காரணமாக டெங்குக் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்டஅளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏடிஸ் கொசுக்களில் டெங்குவைரஸ் உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி அப்பகுதிகளில் டெங்குபாதிப்பு உண்டாகும் முன்பே மாவட்ட அளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

உயிர்காக்கும் மருந்துகள்: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவிகள் ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அப்பகுதியில் உடனடியாக காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தைத் கண்டறிந்து, அதை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

காய்ச்சல் ஏற்பட்டவுடன் பொது மக்கள் மருத்துவமனையை அணுகுமாறும், தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடைகளில் பொது மக்களுக்கு (உரிய) மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு: காய்ச்சல் கண்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் தேங்காத வண்ணமும், குடிநீர் மாசுபடாமல் இருக்கவும் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in