

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெம்பக்கோட்டையிலிருந்து சுமார் 4 கி.மீ.தொலைவில் உள்ள சிவசங்குபட்டியில் சிலர் கட்டிடப் பணிகளுக்காக குழி தோண்டி உள்ளனர். அப்போது, 6 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இவற்றில் 4 முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளன. மீதம் உள்ள 2 முதுமக்கள் தாழிகளை அப்பகுதியினர் பத்திரமாக எடுத்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் அலுவலர் பொன் பாஸ்கர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் அங்கு சென்று, முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தனர். அப்போது, அவை இரண்டும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்தது. அதோடு, சிவசங்குபட்டியில் மேலும் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
பின்னர், அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2 முதுக்கள் தாழிகளும் பாதுகாப்பாக வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
இதுகுறித்து, தொல்லியல் துறை அலுவலர் பொன் பாஸ்கர் கூறுகையில், முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள பகுதியில் முறையான ஆய்வு நடத்தப்பட்டால் மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என்றார்.