Published : 13 Sep 2023 04:00 AM
Last Updated : 13 Sep 2023 04:00 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே காமராஜர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையை அகற்ற நோட்டீஸ் வழங்கிய மாநகராட்சி உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மேயர் ந.தினேஷ் குமார் நேற்று தெரிவித்தார்.
திருப்பூர் காமராஜர் சாலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் சார்பில் அம்பேத்கர் அறிவாயுதம் அறக்கட்டளை என்ற பெயரில் அம்பேத்கரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை அமைந்துள்ள இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி, சிலையை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டுமென கடந்த வாரம் மாநகராட்சி உதவி ஆணையர் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதற்கு அம்பேத்கரிய மற்றும் பெரியார் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அம்பேத்கர் சிலை இருக்கும் பகுதிக்கு சென்ற மேயர் ந.தினேஷ் குமார், துணை மேயர் பால சுப்பிரமணியம் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மேயர் ந.தினேஷ்குமார் கூறும்போது, ‘‘எனது கவனத்துக்கு வராமல் உதவி ஆணையர் மூலமாக, அம்பேத்கர் சிலையை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணமான உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலை அகற்றப்படாது. இதே இடத்தில், அம்பேத்கருக்குமுழுஉருவ வெண்கல சிலை அமைக்க தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.
இதையடுத்து அம்பேத்கரிய, பெரியார் இயக்க நிர்வாகிகள் பலரும், மேயருக்கு நன்றி தெரிவித்தனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே காமராஜர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் பால சுப்பிரமணியம் உட்பட பல்வேறு அமைப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT