Published : 13 Sep 2023 06:03 AM
Last Updated : 13 Sep 2023 06:03 AM

தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை 3 மடங்கு உயர்த்த முடிவு: ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்க மாநகராட்சி அழைப்பு

சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை (கம்பெனி வரி) மூன்று மடங்கு உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகரட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகள் சட்டப்படி, நிறும வரிகளை திருத்தியமைப்பது குறித்த அறிவிக்கை வெளியிடப்படுகிறது. அரையாண்டுக்கான நிறுமவரியானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆட்சேபணைகள் இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையாளர். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிடம், சென்னை - 600003’ என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும்.

2023-24-ம் ஆண்டின் 2-வதுஅரையாண்டு முதல் திருத்தியமைக்க உத்தேசித்துள்ள புதியநிறும வரி விகிதத்தை பொறுத்தவரை, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தலைமையிடத்தை கொண்டு இயங்கும் நிறுவனங்களில், முதலீட்டுத்தொகை ஒரு லட்சத்துக்கு குறைவாக இருந்தால் வரி தற்போதுள்ள ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படுகிறது.

ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரைரூ.100 என்பது ரூ.600 ஆகவும், ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை ரூ.300 என்பது ரூ.900 ஆகவும், ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் வரை ரூ.400 என்பது ரூ.1200 ஆகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ரூ.500 என்பது ரூ.1500 ஆகவும், ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரூ.1000 என்பது ரூ.3000 என உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்கு வெளியில் தலைமையிடம் அமைந்து, கிளை நிறுவனம் உள்ளே இருந்தால், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.5 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால் ரூ.25 என்பது தற்போது ரூ.75 ஆகவும், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ரூ.50 என இருந்தது ரூ.150 ஆகவும், ரூ.10ஆயிரத்து 1 முதல் ரூ.20 ஆயிரம் வரை ரூ.100 என இருந்தது ரூ.300 ஆகவும், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரூ.300 மற்றும் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல், கூடுதலாக உள்ள ஒவ்வொரு ரூ.5 ஆயிரத்துக்கும் ரூ.75 வீதம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அல்லது முதன்மை அலுவலகம் சென்னையில் இல்லாவிட்டாலும் முதல் ஆண்டுக்கு நிறும வரி ரூ.75 செலுத்தப்பட வேண்டும். ஆனால் அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் அந்த ஆண்டில் ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இருப்பதாக கண்டறிந்தால், அந்த நிறுவனம் அறிவித்துள்ள விகிதப்படி முதலில் செலுத்திய ரூ.75 போக மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x