Published : 13 Sep 2023 06:25 AM
Last Updated : 13 Sep 2023 06:25 AM
சென்னை: இந்துக்களை பாஜக தவறாக வழிநடத்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறையில் நடந்து வரும் ஊழல்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கட்டுப்படுத்தி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சனாதன சக்திகள், அமைச்சரை பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அவர்களின் கனவு பலிக்காது.
சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை அறுப்போம் என மத்திய அ்மைச்சர் ஷெகாவத் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் எத்தகைய அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்பதை அவர்பேட்டி மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
நாக்கை அறுப்போம் என அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் பேசுகிறார் என்றால் மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அந்த கொள்கை எந்தளவுக்கு பயங்கரவாதம் கொண்டது என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை. அமைச்சரின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறோம். சனாதனத்தை விமர்சிப்பது இந்து மக்களின் நம்பிக்கையை விமர்சிப்பதாகாது. தீட்டு, பாகுபாடு ஆகியவற்றைக் கொண்டது சனாதனம்.
எனவே, உயர்வகுப்பு, கீழ் வகுப்பு, ஆண், பெண் போன்ற பாகுபாடுகளை எதிர்ப்பதுதான் சனாதன எதிர்ப்பு. இதைப் புரிந்து கொள்ளாதவர்களைப் போல பாஜக, ஆர்எஸ்எஸ் புதிய விளக்கம் தருகிறார்கள். இந்துக்களை விமர்சிப்பதைப் போல தவறாகத் திரித்து அம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT