

சென்னை: கொளத்தூர் ராஜா தோட்டம் திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ரூ.27.03 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 162 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் ஒருபகுதியாக, கொளத்தூர், ராஜா தோட்டம் திட்டப்பகுதியில் 162 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர், ராஜா தோட்டம் திட்டப் பகுதியில் கடந்த 1975-ம் ஆண்டு தலா 326 சதுர அடியில் தரை மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்ட 84 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி ரூ.27.03 கோடியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 162 புதிய குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒவ்வொரு குடியிருப்புகளும் 410 சதுர அடி பரப்பளவில், பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, தனித்தனியே குளியலறை மற்றும்கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படவுள்ளது.
இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கெனவே இருந்த 84 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.மீதமுள்ள78 குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரைரூ.1583.41 கோடி மதிப்பில் 15,505 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, வீட்டுவசதித்துறை செயலர்அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ. சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.