Published : 12 Sep 2023 12:33 PM
Last Updated : 12 Sep 2023 12:33 PM

மணல் அகழ்வு முறைகேடு: தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

கோப்புப் படம்

சென்னை: மணல் அகழ்வு முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையை அரசே தமிழ்நாடு நீர்வளத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. ஆன்லைனில் மணல் வாங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இவ்வாறு விற்கப்படும் மணல் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு உரிய வரி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கத்துறை ஆய்வு மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கணக்கில் வராமல் பெருமளவில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக ஆஃப்லைனிலும் விற்பனை நடப்பதாக சந்தேகிக்கும் அமலாக்கத்துறை, மணல் விற்பனையில் பணமோசடி மற்றும் வரிஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தின் வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் அள்ளும் மையங்கள், மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழக காவல்துறையின் பாதுகாப்பைக் கோரவில்லை என தெரிகிறது. அதேநேரத்தில், தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்த தகவல் மட்டும் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்திலும், வல்லத்திரக்கோட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், திருச்சி கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள மணல் விற்பனையகத்திலும், மணல் ஒப்பந்ததாரர் ரத்தினம் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x