

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக மதுரவாயலில் 4 வயதுகுழந்தை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடிநீர் வசதி இல்லை: மதுரவாயல் பகுதியில் குடிநீர்வசதி சரிவர செய்து தரப்படவில்லை. மாநகராட்சி லாரிகள் மூலம் அளிக்கும் தண்ணீரைப் பிடித்துவைத்து, பல நாட்களுக்குப் பயன்படுத்தும் அவல நிலைநிலவுகிறது. சிறுவனின் உயிரிழப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம் என்றும்அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் 6 மாதங்களில் 3,400 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்திலும் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்டமாநிலங்களிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: டெங்கு தொற்று நோய் என்பதையும், அண்டை மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதையும் கருத்தில்கொண்டு, குடிநீர் வசதி இல்லாத பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யவும், டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்ப வர்களைக் கண்டறிந்து, அவர் களுக்கு உரிய சிகிச்சை அளித்து, டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், மதுரவாயல் உள்ளிட்டஅனைத்துப் பகுதிகளிலும் முறையான ஆய்வு மேற்கொண்டு, டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.