

ஈரோடு: இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜரானார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது, குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், சீமான் நேற்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்.10-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தது. தொடர்ந்து, பாரதியார் மற்றும் இமானுவேல் சேகரன் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்குத் தொகுதி பிரச்சாரத்தின்போது நான் வரலாறைப் பேசினேன். அதற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில், குறிப்பிட்ட சமுதாயம் குறித்து திமுகவின் ஆ.ராசா அவதூறாகப் பேசியதற்கு வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
நடிகை விஜயலட்சுமி: நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து, வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாளை (இன்று) ஆஜராகி விளக்கம் அளிப்பேன்.
காவிரியில் உரிய தண்ணீர் பங்கீடு இல்லாதவரை, தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய பங்கீடு இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும். திமுக ஆட்சியில் நடந்த 1,000 கும்பாபிஷேகமும் சமஸ்கிருதத்தில் தான் நடத்தப்பட்டது. இவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.