Published : 12 Sep 2023 06:08 AM
Last Updated : 12 Sep 2023 06:08 AM
சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் உள்ள பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் அரசுக் கட்டிடங்களில் தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் வீட்டுக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்றுசிறுவனின் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டு, சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கையாக மாநகரில் உள்ளசுமார் 17 லட்சம் வீடுகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்துக்கும் சுமார்500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுப்புழு வளரிடங்களான, மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் உள்ளிட்டவை) ஆகியவற்றை கண்டறிந்து கொசுப்புழுக்கள் இருப்பின் அதை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுகொசு ஒழிப்பு பணிக்கென 3 ஆயிரத்து 278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், தெளிப்பான்கள் மற்றும் புகைபரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அபராதம் விதிக்கப்படும்: அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய நன்னீர் தேங்கிய இடங்களிலும், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்களில் உள்ள தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களிலும், காலி மனைகளிலும் டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டால், தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இலவச நிலவேம்பு குடிநீர்: அதிக காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட வேண்டும். இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT