Published : 12 Sep 2023 06:00 AM
Last Updated : 12 Sep 2023 06:00 AM
சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநர், தெலங்கானா ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறுகட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னைகிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியாரின் சிலையும், அருகே அவரது திருவுருவ படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவசிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், த.வேலு எம்எல்ஏ உள்ளிட்டோரும் பாரதியாரின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமாகா இலக்கிய அணி மாநில தலைவர் கே.ஆர்.டி.ரமேஷ் ஆகியோரும் அஞ்சலி செய்தனர்.
பாரதிக்கு புகழாரம்: ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாரதியாரின் நினைவு நாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்தமகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை விஸ்வகுருவாக கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: ‘வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்று என்னை என்றும் ஊக்கப்படுத்தி கொண்டிருக்கும் மகாகவி பாரதியாரின் நினைவை போற்றுகிறேன்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என தமிழ் மொழி மீது கொண்ட பற்றால், மக்கள் மனதில் விடுதலை உணர்வை விதைத்தவர் மகாகவிபாரதியார். அவரது நினைவு தினத்தில், அவர்தம் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விடுதலை உணர்வை தூண்டியவர் மகாகவி பாரதியார். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று முழங்கிய தீர்க்கதரிசி பாரதியாரின் தேசப்பற்றை போற்றுவோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என அனைத்து துறைகளிலும் எண்ணங்களாலும், எழுத்துகளாலும் மாபெரும் புரட்சியை செய்தவர் மகாகவி பாரதியார். உலகிற்கே பாரதம் குருவாக விளங்கும் என்கிற பாரதியின் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. மகாகவியின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறேன்.
ஒப்பற்ற கவிஞன்:
மநீம தலைவர் கமல்ஹாசன்: 36 ஆண்டுகளுக்கு முன்பு மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள்எனக்குத் தாய்’ என்று எழுதியிருக்கிறேன். அப்போது என்வயது 33. அந்த உணர்வும், பாரதிதந்த நெருப்பும் துளியும் குறையவில்லை. மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பாரதியாரின் 102-வது நினைவு நாளில் அவரது நினைவை போற்றுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT