

சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.1.50 கோடியில் பார்வையாளர்கள் தங்குமிடம் விரைவில் கட்டப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு எம்எல்ஏதொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்ரூ.1.50 கோடியில் பார்வையாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கு இடம் தேர்வுசெய்ய, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவின் 2-வது பழமையான புற்றுநோய் மருத்துவமனை எனும் சிறப்போடு கடந்த 69 ஆண்டுகளாக அடையாறு மருத்துவமனை சேவையாற்றி வருகிறது. ஆண்டுக்கு 1.60 லட்சம் பேர் இங்குபுற்றுநோய்க்கு தொடர் சிகிச்சைபெற்று வருகின்றனர். ஒவ்வோர்ஆண்டும் 16,000 புதிய புற்றுநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கான வசதிகளை நிர்வாகம் செய்து தருகிறது.
இந்நிலையில், கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும் வகையில், 2023-24-ம்ஆண்டு சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் நோயாளிகள், பார்வையாளர்கள் தங்குவதற்கு ரூ.1.50 கோடியில் புதிய தங்குமிடம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. அதற்கான ஆய்வுதற்போது நடந்துள்ளது. மிக விரைவில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, கழிப்பிடம், குளியலறை ஆகிய வசதிகளுடன் தங்குமிட கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இந்த மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சைஅளிக்கப்படுகிறது. 1,700-க்கும்மேற்பட்ட மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், ஒருசில மருத்துவமனைகள் மிக சிறப்பாக இத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஏழை மக்களுக்கு சிறப்பான புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறது. இந்த மருத்துவமனையின் நடமாடும் வாகனம் மூலமாக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் கல்பனா, துணை தலைவர் ஹேமந்த்ராஜ், மருத்துவர் சுரேந்திரன், சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் துரைராஜ், நகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.