Published : 12 Sep 2023 06:30 AM
Last Updated : 12 Sep 2023 06:30 AM

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், புரசைவாக்கம் அருகே உள்ள கொசப்பேட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம் : ம.பிரபு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர மு.அருணா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. எனவே வருகிறவிநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்படும் இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளுக்கு ஆபரணங்களைத் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளைப் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை.வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமேசிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்கப் பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இயற்கைப் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x