Published : 12 Sep 2023 06:12 AM
Last Updated : 12 Sep 2023 06:12 AM
திருப்போரூர்: திருப்போரூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே கோரிக்கை முழக்க போராட்டம் திருப்போரூர் ஒன்றிய செயலர் எம்.செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக, கந்தர்வக்கோட்டை எம்எல்ஏவும், மாநில குழு உறுப்பினருமான எம்.சின்னதுரை பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.பகத்சிங் தாஸ், ஒன்றிய குழு உறுப்பினர் கே.லிங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், நிர்வாக வசதியையும் மற்றும் பொதுமக்கள் நலனையும் கருத்தில்கொண்டு திருப்போரூரில் (RTO) வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும், 2,500 போக்குவரத்து வாகனமும், 7,500 போக்குவரத்து அல்லாத வாகனமும் இருந்தால் (RTO) போக்குவரத்து பகுதி அலுவலகம் அமைத்துத் தர முடியும் என்று சட்டப்பேரவையில் துறையின் அமைச்சர் கொடுத்த விளக்கத்தின்படி, லட்சக்கணக்கான வாகனம் இருந்தும் திருப்போரூர் ஒன்றியத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,
திருப்போரூர் ஒன்றியத்தில் நகர மயமாதலும் மக்கள் தொகையும் பெருகிவரும் நிலையில் வண்டலூர் தாலுக்காவையும் திருப்போரூர் தாலுக்காவையும் இணைத்து தனி கோட்டமாக அறிவிப்பு செய்ய வேண்டும்,
திருப்போரூர் ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளும் மக்கள் தொகையும் பெருகிவரும் நிலையில் நில உரிமையாளர்கள் அதிகமான காரணத்தால் தற்போது உள்ள கோட்டாச்சியர் அலுவலகம் சென்றுவர 40 கி.மீ பயணத்தை குறைக்கும் வகையிலும், நிர்வாக வசதிக்காகவும் உடனுக்குடன் மக்கள் பயன்பெறும் வகையிலும் தனி கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில், கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT