Published : 22 Dec 2017 09:02 AM
Last Updated : 22 Dec 2017 09:02 AM

சுவிட்சர்லாந்து நாட்டின் முனைவருக்கு கணிதமேதை சீனிவாச ராமானுஜன் விருது: சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் சார்பில் 2017-ம் ஆண்டுக்கான கணித மேதை சீனிவாச ராமானுஜன் விருது சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முனைவர் மரீனா வியாசோவ்ஸ்கா-வுக்கு நேற்று வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் உலக அளவிலான எண்கணித மாநாட்டின் தொடக்க விழா, சாஸ்த்ரா- ராமானுஜன் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

மாநாட்டைத் தொடங்கி வைத்து, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வலைப்பின்னல் மற்றும் சேவைகள் பொறியியல் துறையின் துணைத் தலைவர் பத்ரிநாராயணன் பார்த்தசாரதி பேசியதாவது:

பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் கணிதத்தின் மீதான தன்னுடைய பற்றை விட்டுவிடாமல் இருந்த கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் வாழ்வு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இன்றைய சூழலில் தகவல்களைப் பாதுகாப்பது, குறிப்பாக எண் குறியீட்டு முறையில் தகவல் பாதுகாப்பு மற்றும் காப்புரிமை முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு எண் கணிதம் மற்றும் ராமானுஜனின் பங்களிப்புகள் உதவுகின்றன என்றார்.

தொடர்ந்து, 2017-ம் ஆண்டுக்கான கணித மேதை ராமானுஜன் விருது, கோளக் கட்டமைப்பு தொடர்புடைய கணிதத்தில், 8-வது பரிமாணத்தில் சிறப்பான முறையில் தீர்வுகளைக் கண்டறிந்ததற்காக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்விஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முனைவர் மரீனா வியாசோவ்ஸ்கா-வுக்கு வழங்கப்பட்டது. பரிமாணம் 8-ன் மூலம் கோளக் கட்டமைப்பை 24-வது பரிமாணத்தில் தீர்வு கண்டதற்கும், கிராஸ்- சேகியர் கருத்தாக்கங்கள், கோள வடிவமைப்பு தொடர்புடைய கோரிவார் மற்றும் மேயர்ஸ் கருத்தாக்கங்கள் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதையும் இவ்விருது அங்கீகரித்துள்ளது. பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை கொண்ட இப்பரிசு உலக அளவில் கணிதத் துறையில் முக்கிய பரிசாக மாறியுள்ளது.

விருதைப் பெற்றுக்கொண்ட முனைவர் மரீனா வியாசோவ்ஸ்கா கூறியபோது, “கணித மேதை சீனிவாச ராமானுஜன் வாழ்ந்த மண்ணைத் தொட்டதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் உள்ளேன். கணிதத்தை புதிய முறையில் கணக்கிட வித்திட்டவர் ராமானுஜன்” என்றார்.

முன்னதாக, சாஸ்த்ராவின் திட்டம் மற்றும் மேம்பாட்டு புல முதன்மையர் முனைவர் எஸ்.வைத்தியசுப்ரமணியம் வரவேற்றார். நிறைவாக சீனிவாச ராமானுஜன் மைய முதன்மையர் முனைவர் வி.ராமஸ்வாமி நன்றி தெரிவித்தார்.

மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கணித அறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x