

நாகர்கோவில்: ஸ்பெயினில் நடைபெறவுள்ள உலக அளவிலான இரும்பு மனிதன் போட்டிக்கு தேர்வான குமரி வீரர் கண்ணனின் பயிற்சியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாமரைக்குட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன் (41). உடற்கல்வி பயிற்சியாளரான இவர், ஏற்கெனவே இந்திய இரும்பு மனிதர் பட்டத்தை வென்றுள்ளதுடன் பஞ்சாப்பில் நடந்த உலக இரும்பு மனிதன் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
பொது மக்கள் முன்னிலையில் 9 டன் எடையுள்ள லாரியை கயிற்றால் இழுத்தும், 7 டன் எடையுள்ள ஜேசிபி இயந்திரத்தை இழுத்தும், இன்ஜின் இல்லாத காரை வெகு தூரத்துக்கு தூக்கிச் சென்றும் சாதனை படைத்தனர். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஸ்பெயினில் உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி நடைபெறுகிறது.
இதில் இந்தியாவில் இருந்து பங்கேற்க கண்ணன் தேர்வாகியுள்ளார். இதற்கான பயிற்சியை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் விஜய் வசந்த் எம்.பி., தொடங்கி வைத்தார். ஒன் ஆர்ம் டம்பிள் பிரஸ், ஐஸ் லேண்ட் கிராஸ், லாக் பிரஸ் உள்ளிட்ட பயிற்சியை விளையாட்டு வீரர்கள், மக்கள் முன்னிலையில் கண்ணன் மேற்கொண்டார்.