

வழக்கறிஞர் சேமநல நிதித் திட்டத்துக்கு பதியாவிட்டால் பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பார் கவுன்சில் தலைவர் எச்சரித்துள்ளார்.
இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி 1993-ம் ஆண்டுக்கு முன் பார் கவுன்சிலில் பதிந்தவர்கள் கட்டாயமாக பார் கவுன்சிலின் நிதித் திட்டத்துக்கு பதிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 1993-ம் ஆண்டிற்கு பின் கட்டாயமாக்கப்பட்ட இந்திய பார் கவுன்சிலின் வழக்கறிஞர் நிதித் திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 56,000 வழக்கறிஞர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பார் கவுன்சில் தலைவர், விஜய் நாராயணன் கூறியதாவது:
“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 86,000 வழக்கறிஞர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், 56,000 வழக்கறிஞர்கள் இந்திய பார் கவுன்சிலின் வழக்கறிஞர் நல நிதித் திட்டத்தின் கீழ் பதிந்துள்ளனர். மீதமுள்ள 30,000 வழக்கறிஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் உள்ளனர்.
வழக்கறிஞர்கள் அனைவரும் பார் கவுன்சிலின் நலத் திட்டதின் கீழ் பதிவு செய்யாவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். மேலும், விரைவில் நடக்கவுள்ள பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடவோ வாக்களிக்கவோ முடியாது.”
இவ்வாறு அவர் கூறினார்.