மகளிர் உரிமைத் திட்ட அப்டேட் முதல் ரஹ்மான் இசை நிகழ்வு சர்ச்சை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.11, 2023
மகளிர் உரிமைத் திட்டத்துக்கு எத்தனை பேர் தகுதி?: "மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்துகொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் முகாம் அலுவலகத்திலிருந்து திங்கள்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசிகையில் "ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம். அதேபோல்தான் சிறு தவறு நடந்துவிட்டால் அதனால் கிடைக்கும் கெட்டபெயரும், என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனவே, எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும், எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறு கூட நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருவதை, தற்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்றார்.
‘தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது’: சென்னை மதுரவாயலில் நான்கு வயது சிறுவன் ரக்ஷன் டெங்கு பாதிப்பால் உயிரிழந்த நிலையில், “தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக டெங்கு என்பது கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கூட மிகப் பெரிய அளவில் கட்டுக்குள்தான் இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இசை நிகழ்வில் குளறுபடியால் வருந்திய ரஹ்மானின் விளக்கம்: சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல்லாயிர ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக மிகவும் வருந்துவதாகவும், அதற்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி இந்து ஆங்கிலம் செய்தித் தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “இது எனக்கு ஒரு பாடம். ஒரு இசை கலைஞனாக மட்டுமின்றி, நிகழ்ச்சி நடைபெறும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். இனி நான் ஓர் இசை நிகழ்ச்சியின் அம்சங்களை தாண்டியும் சிந்திக்க வேண்டும். இனி இதுபோன்று எப்போதும் நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். இதனிடையே, அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நானே பலி ஆடு ஆகிறேன் என்று குறிப்பிட்ட பதிவு வைரல் ஆனது.
இபிஎஸ் மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
‘இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது’: இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் திங்கள்கிழமை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இளவரசர் முகம்மது பின் சல்மானும் நானும் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மதிப்பாய்வு செய்தோம். வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தொடர்புகள் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
“5 மாநில தேர்தல்களை ஒத்திப்போடுவதே மத்திய அரசின் நோக்கம்”: விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை தள்ளிப்போடுவதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரத்தின் நோக்கம் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், அரசியல் ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்தியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ள நாட்டில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் சாலை விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சாலையில் பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில்,ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் மூடல் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிகப்பட்டது. ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து திங்கள்கிழமை தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
பந்த் காரணமாக ஆந்திராவில் பரவலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனிடையே ஆங்காங்கே தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல், தர்ணாவில் ஈடுபட்டதால் அவர்களைப் போலீஸார் கைது செய்தனர். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தனர்.
‘மனித உரிமைகள் குறித்து மோடியுடன் பேசினேன்’ - பைடன்: இந்தோ - அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியுடன் கணிசமான விவாதங்களை நிகழ்த்தியதாகவும், ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். வியாட்நாம் தலைநகரில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், "ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
