அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இரு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜர்

அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இரு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜர்
Updated on
1 min read

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்தாய். கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 1988-ல் நியமிக்கப்பட்டார். தன்னை பணி நிரந்தரம் செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து பணப்பலன்களையும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே சின்னதாய் இறந்தார். இதனால், அவரது மகன் பரமன் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, பள்ளி கல்வித் துறை இயக்குநர் நந்தகுமார். நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின் போது காகர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவனாந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காகர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதாகவும், பிடியாணையை ரத்து செய்யுமாறும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை சென்னை காவல் ஆணையர் முறையாக அமல்படுத்தவில்லை. இது வேதனை அளிக்கிறது. கல்வித் துறையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், பள்ளி காவலர்களுக்கு பணப்பலன்கள், பதவி உயர்வு வழங்கும் உத்தரவுகள் முறைப்படி அமல்படுத்தப்படுவதில்லை.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் 80 சதவீத நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் கல்வித் துறையில் இருந்துதான் தாக்கல் செய்யப்படுகிறது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொள்வதை ஏற்க முடியாது'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in