Published : 18 Dec 2017 09:20 AM
Last Updated : 18 Dec 2017 09:20 AM

கோடி, கோடியாக பணம் கொடுத்தாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கோடி, கோடியாக பணம் கொடுத்தாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரச்சாரத்தை தொடங்கினார். வீரராகவன் சாலையில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், செரியன் நகர், கண்ணுபிள்ளை தெரு, பாலகிருஷ்ண தெரு, சிஜி காலனி, விநாயகபுரம், கும்மாளம்மன் தெரு உள்ளிட்ட இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு தெருவிலும் அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடக்கும். அந்த தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி அமையும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு, இடைத்தேர்தல் நடக்கிறது. அவரின் மரணம் மர்மமாகவே உள்ளது. ஜெயலலிதா நினைவிழந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். ஏன் இதனை முன்பே தெரிவிக்கவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் மேல் மட்டத்தில் இருந்தவர்கள் சொல்ல வேண்டாம் என தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் தங்களை இரட்டை குழல் துப்பாக்கி என்கின்றனர். இவர்களுடன் சசிகலாவும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியாக இருந்து ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளனர். பணப்பட்டுவாடா காரணமாகத்தான் ஆர்.கே.நகர் தேர்தல் கடந்த முறை ரத்து செய்யப்பட்டது. அந்த பணப்பட்டுவாடா புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க திமுக தயார். கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும் திமுகவை எதிர்த்து நிற்கும் அதிமுகவின் எந்த அணியாக இருந்தாலும் இத்தேர்தலில் டெபாசிட் பெற முடியாது என்றார். .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x