

சென்னை: கலப்படப் பால் தயாரித்து விற்பனை செய்த ஆவின் ஓட்டுநர் ராஜ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணைக்குத் தேவையான பால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பண்ணையில் பணிபுரியும் பால் வேன் ஓட்டுநர் ராஜ்குமார் (35), பால் பவுடர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துச் சென்று, தண்ணீருடன் அவற்றைக் கலந்து கலப்பட பால் தயாரித்து, அங்குள்ள தொடக்க பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து ஆவின் நிறுவன ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, டிஎஸ்பி சத்தியசீலன், காக்களூர் பால் கொள்முதல் பிரிவு உதவிப் பொதுமேலாளர் சொர்ணாகுமார் ஆகியோர் நடத்திய விசாரணையில், ராஜ்குமார் கலப்பட பால் விற்பனை செய்தது உறுதியானது.
தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம் ஜனகாபுரம் கிராமத்தில் உள்ள ராஜ்குமாரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அங்கிருந்து 140 பால் பவுடர் பாக்கெட்கள், 175 கிலோ வெண்ணெய், பால் கலக்கும் இயந்திரம், பாலில் இருந்து கொழுப்பை பிரித்தெடுக்கும் இயந்திரம் போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ராஜ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், முறைகேட்டுக்கு துணையாக இருந்த பால் உற்பத்தியாளர் சங்கச் செயலர் தயாளன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டுநர் ராஜ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பால் முகவர்கள் சங்கத்தினர் கூறும்போது, "பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்த ஆவின் ஊழியர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக காவல் துறைக்குப் பரிந்துரைக்காமல், அவரைக் காப்பாற்றும் நோக்கில் காஞ்சிபுரம்-திருவள்ளூர் ஒன்றிய பொது மேலாளர் ரமேஷ்குமார் செயல்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் மட்டும் செய்துள்ளது கண்துடைப்பு நாடகமாகும்.
அந்த ஊழியரால் ஆவினுக்கு பெரிய அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஆவின் பாலின் தரம் தொடர்பாக மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பால் கலப்பட விவகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும்" என்றனர்.