

சென்னை: உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி சென்னையில் நேற்று விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப். 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ‘சிநேகா’ என்ற தற்கொலை தடுப்பு அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் இருந்து, 3 கி.மீ.தொலைவுக்கு நேற்று விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது.
இதில், கல்லூரி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். நடிகர் சித்தார்த் நடைபயிற்சியைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், உலக சுகாதார நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், சிநேகா அமைப்பு தலைவர் நல்லி குப்புசாமி, இயக்குநர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சிநேகாஅமைப்பு நிறுவனர் லஷ்மி விஜயகுமார் கூறும்போது, “சிநேகா என்பது சென்னையை மையமாகக் கொண்ட தற்கொலை தடுப்பு அமைப்பாகும். விரக்தி,மனச்சோர்வு, துன்பம், தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு, நிபந்தனையற்ற, உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறது. எங்களைத் தொடர்பு கொள்பவர்களின் விவரங்களை வெளியில் தெரிவிப்பதில்லை. எங்கள் அமைப்பு 35 ஆண்டுகளுக்கும் மேலாக தற்கொலை தடுப்பு சேவையில் ஈடுபட்டு வருகிறோம்.
இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிநேகா அமைப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது" என்றார்.