தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாக மாறும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் @ வேலூர்

கந்தனேரி பகுதியில் உள்ள மணல் குவாரியில் இருந்து திறந்த நிலையில் மணல் ஏற்றிச் செல்லும் லாரி.படம்: வி.எம்.மணிநாதன்.
கந்தனேரி பகுதியில் உள்ள மணல் குவாரியில் இருந்து திறந்த நிலையில் மணல் ஏற்றிச் செல்லும் லாரி.படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
2 min read

வேலூர்: கந்தனேரி பாலாறு மணல் குவாரியில் இருந்து செல்லும் மணல் லாரிகளால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மணல் திட்டுகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக மாறி வருகிறது.

திறந்த நிலையில் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கந்தனேரி கிராமத்தில் உள்ள பாலாறு பகுதியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு, நீர்வள ஆதாரத்துறை சார்பில் லாரிகளில் மணல் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு மணல் குவாரி என்பதால் தினசரி 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றி அனுப்பப்படுகிறது. மணல் ஏற்றும் பணிக்காக தனியார் யார்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் திறந்த நிலையில் மணலை ஏற்றிச் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக மாறி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘பாலாற்றில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு சாலையில் மணல் படர்ந்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பில்லாமல் ஆபத்தானதாக மாறி வருகிறது. அந்த பகுதியில் சாலை பாதுகாப்பு தடுப்புகள் வைத்திருந்தாலும், அங்கு படர்ந்திருக்கும் மணல் திட்டுகளை அவ்வப்போது சுத்தம் செய்து வருகின்றனர்.

ஆனால், அது போதுமானதாக இல்லாமல் இருக்கிறது. மணல் லாரிகள் செல்வதற்காக தனி பாதை போன்று அமைப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் பிற வாகனங்கள் செல்லும் போது இட நெருக்கடியும் ஏற்படுகிறது. அதேபோல், மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் திறந்த நிலையில் மணலை ஏற்றிச் செல்வதால் காற்றின் வேகத்தில் லாரிகளில் இருந்து பறக்கும் மணல் துகள்கள் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக மாறுகிறது.

மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் கண்டிப்பாக தார் பாலின் உறை மூடிச் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், மணல் லாரிகள் அதை கடைபிடிப்பதில்லை. அதேபோல், லாரிகளில் இருந்து கொட்டும் உபரி மணலால் கழனிப்பாக்கம் சாலை திருப்பத்தில் மணல் திட்டுகளாக மாறி வருகிறது. அதையும் முறையாக அகற்றுவதில்லை. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குத்தான் ஆபத்தானதாக மாறி வருகிறது. இதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டிய அதிகாரிகள் யாருமே கண்டுகொள்வதில்லை’’ என தெரிவித்தனர்.

இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘அரசாங்கமே மணல் குவாரியை நடத்தி வருகிறது. மணல் யார்டில் இருந்து புறப்படும் லாரிகளை அவர்கள் முறையாக கண்காணித்தால் எல்லா பிரச்சினையும் சரியாகி விடும். தேசிய நெடுஞ்சாலையில் படர்ந்துள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணி நடைபெற்றாலும், அது போதுமானதாக இருப்பதில்லை என்பதில் நியாயமான காரணம் உள்ளது. மணல் லாரிகள் மீது தார் பாலின் உறை மூடிச் செல்வதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in