சனாதனம் குறித்து நான் சொல்லாதவற்றைத் திரித்து பொய்யைப் பரப்புகின்றனர்: அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

நெய்வேலியில் நடந்த திமுக எம்எல்ஏ சபா ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நெய்வேலியில் நடந்த திமுக எம்எல்ஏ சபா ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Updated on
2 min read

நெய்வேலி: "சனாதனம் குறித்து நான் பேசிவிட்டு போய்விட்டேன். அது ஒருநாள் செய்தியோடு முடிந்திருக்கும். அதைவிடுத்து, நான் சொல்லாததெல்லாம் கூறியதாக திரித்து, பொய்யைப் பரப்பி, இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பேசப்படுகிறது" என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் திமுக எம்எல்ஏ சபா.ராஜேந்திரனின் இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது: "சனாதனம் குறித்து நான் பேசிவிட்டு போய்விட்டேன். அது ஒருநாள் செய்தியோடு முடிந்திருக்கும். அதைவிடுத்து, நான் சொல்லாததெல்லாம் கூறியதாக திரித்து, பொய்யைப் பரப்பி, இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பேசப்படுகிறது.

பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பேசியுள்ளனர். அதுவும் சமீபகாலமாக என்னுடைய தலையை அவர்கள் ஏலம் விடுகின்றனர். 10 லட்சத்தில் ஆரம்பித்து இப்போது 10 கோடி ரூபாய்க்கு சென்றுள்ளது. என் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் பரிசு. சொன்னது யார்? சாமியார். சாமியார் ஒருவர் 10 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறுகிறாரா? அவரிடம் ஏது இவ்வளவு பணம்? , அவர் சாமியார் தானா? என்று நான் கேட்டேன். இந்த கேள்வியை பத்திரிகையாளர்கள் சென்று அவரிடம் கேட்கின்றனர். அதற்கு அவர், தன்னுடைய சொத்து மதிப்பு 500 கோடி என்று கூறுகிறார். 500 கோடி ரூபாய் வைத்திருப்பவர் உண்மையான சாமியாராக இருக்க முடியுமா? என்பதை நீங்களே யேசித்து பாருங்கள்.

என்னுடைய தலைக்கு எதற்கு 10 கோடி, 10 ரூபாய் சீப்பைக் கொடுத்தால் நானே சீவிக் கொள்வேன். மறைந்த தலைவர் கருணாநிதிக்கும் இதேபோல ஒரு மிரட்டல் வந்தது. இந்த திருமண விழாவுக்கு பெண்கள் பலரும் வந்துள்ளனர். நீங்கள் யோசித்து பாருங்கள். நூறு வருடங்களுக்கு முன்பு, பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது. மருத்துவப் படிப்பு படிக்க முடியாது. மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். கணவனை இழந்தவர்கள் உடன்கட்டை ஏற வேண்டும். இதையெல்லாம் எதிர்த்ததுதான் திமுக. இதையெல்லாம் எதிர்த்தவர்கள்தான், அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் தமிழக முதல்வரும். அவர்கள் பேசாதது எல்லாம் நான் எதுவும் பேசவில்லை. என்னைவிட அவர்கள் அனைவரும் அதிகமாக பேசியுள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி என்ன செய்தார் என்று கேட்டோம். இந்தியாவை நான் மாற்றி காட்டுகிறேன் என்றார். தற்போது மாற்றிவிட்டார். இந்தியாவின் பெயரை மாற்றவிட்டார். இப்போது யாரும் இந்தியா என்று கூப்பிடக்கூடாது என்று கூறுகின்றனர். ஏனென்றால், இண்டியா கூட்டணி என்று நம்முடைய கூட்டணிக்கு பெயர் வைத்துவிட்டதால், யாரும் அந்த பெயரை கூப்பிடக் கூடாது என்பதற்காக, பெயரை மாற்றிவிட்டார். இப்படிப்பட்ட கேலிக்கூத்தான ஆட்சி ஒன்றிய பாஜக ஆட்சி. சனாதனத்துக்கு எதிராக 200 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம். திமுக ஆரம்பிக்கப்பட்டதே, சனாதனத்தை ஒழித்து சமுகநீதியை வளர்க்கத்தான். எனவே, தொடர்ந்து குரல் கொடுப்போம். இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் குரல் கொடுப்போம். அதைவிட முக்கியமான விஷயம் இந்த பாசிச பாஜக அரதை தூக்கி எறிய வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் ஒரே முடிவெடுத்து அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினீர்கள். 2024 தேர்தலில் நமக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. இந்த அடிமைகளின் எஜமானர்களையும் விரட்டியடிக்க வேண்டும். அதற்கு நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புதான் நாடாளுமன்றத் தேர்தல்" என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in