Published : 10 Sep 2023 04:40 AM
Last Updated : 10 Sep 2023 04:40 AM
சென்னை: மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ம்தேதி காஞ்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தைஉயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டத்தில் இணைய 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்து வருகின்றனர்.
மாதம்தோறும் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளின்வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது. வங்கி கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படஉள்ளது. அதனை ரூபே கார்டாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் உரிமைத் தொகை பணத்தை குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ள முடியும். ஏடிஎம் கார்டுகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததும், அந்த மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குக்கு சென்றுவிடும். அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1-ம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இத்திட்டத்தில் தகுதியான பயனாளர்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாகஉள்ள நிலையில், இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில், 11-ம்தேதி நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT