

மதுரை: நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை மறைக்கவே திமுகவினர் சர்ச்சை கருத்துகளை பேசுகின்றனர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மது விற்பனையைக் கொண்டே அரசை இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பூரண மதுவிலக்கு லட்சியம் என்ற அறிவிப்புக்கு மாறாக பட்டி தொட்டியெல்லாம் மதுக் கடைகளை திறந்து விட்டதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து மதுக் கடைகளிலும் பார்களை திறக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சனாதனம் பற்றி பேசுகின்றனர். அமைச்சரின் சர்ச்சை பேச்சு இந்திய அளவில் பிரச்சினையாக மாறி உள்ளது. சனாதனம் என்ன என்பது தெரியாமலேயே உதயநிதி பேசி உள்ளார். உதயநிதி கருத்துக்கு முதல்வர் கூறிய விளக்கத்தை ஏற்க முடியாது.
திமுக தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இவற்றை மறைக்கவே சர்ச்சை கருத்துகளை பேசுகின்றனர். நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து உதயநிதி மீது வழக்கு பதிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திண்டுக்கல்லில் அவர் கூறுகையில், கனிம வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.