

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி இயந்திரங்களை ஏற்றிவந்த இழுவை கப்பல் தரைதட்டி நின்றது.
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள முதல் மற்றும் 2-வது அணு உலைகளில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 3 மற்றும் 4-வது அணுஉலைகள் அமைக்கும் பணிகள் 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. 5 மற்றும் 6-வது அணுஉலைகளை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக முக்கிய உபகரணங்கள் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ரஷ்யாவிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு 300 டன் எடையுள்ள 2 ஜெனரேட்டர்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த ஜெனரேட்டர்கள் இழுவை கப்பல் மூலம் கடல் மார்க்கமாக கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அணுமின் நிலையம் அமைந்துள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் சிறிய துறைமுகத்தினுள் இந்த இழுவை கப்பல் வந்தபோது திடீரென்று காற்றின் வேகம் அதிகரித்தது. இதனால் கப்பலை கரையிலிருந்து ரோப் கயிறுகள் மூலம் இழுக்கும் முற்சியில் தொய்வு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ரோப் கயிறு அறுந்ததை அடுத்து அந்த கப்பல் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு தரைதட்டி நின்றது.
இது குறித்து தெரியவந்ததும் அணுமின் நிலைய நிர்வாகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்களும், ஒப்பந்தக்காரர்களும் அந்த கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுக பகுதியில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் பாறை இடுக்குகளில் இழுவை கப்பல் சிக்கியிருப்பதாகவும், கடலின் நீர்மட்டத்தின் உயர்வு மற்றும் காற்றின் வேகத்தை பொருத்து மீண்டும் அது அணுமின் நிலைய சிறிய துறைமுகத்திற்கு விரைவில் கொண்டுவரப்படும் என்றும் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.