

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் சார் பதிவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சக பணியாளர்கள் பணிச்சுமையால் திண்டாடி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்ட பத்திரப் பதிவுத் துறையில் வீட்டுமனை விற்பனை பதிவு, விவசாய நிலம் விற்பனை பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் விண்ணப்பம், சங்கங்களின் பதிவு, புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்திரப் பதிவு உள்ளிட்டவற்றுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில், ரூ.1,000-க்கும் குறைவான கட்டணத்தை ஏடிஎம் கார்டு மூலமாக பத்திரப் பதிவு அலுவலகத்திலேயே செலுத்திக் கொள்ளலாம். அதற்கு அதிகமான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
உதகையில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் சார் பதிவு அலுவலகங்கள் உள்ளன. மாவட்ட பதிவாளர் மற்றும் 8 சார் பதிவாளர் பணியிடங்கள் உள்ளன. சார் பதிவாளர் பணியிடங்கள் பெரும்பாலானவை காலியாகவே உள்ளதால், பத்திரப்பதிவு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் தணிக்கைக்காக வெளியே செல்ல வேண்டியிருப்பதால், பிற பணிகள் தேக்கமடைகின்றன.
அதோடு கூடுதல் பணிச்சுமையால் அலுவலர்கள் திண்டாடி வருகின்றனர். இதனால், வீட்டுமனை விற்பனை பதிவு, விவசாய நிலம் விற்பனை பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் விண்ணப்பிக்க வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சு.மனோகரன் கூறியதாவது: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் ஒவ்வோர் ஆண்டும் பொதுக் குழு கூட்டம் நடத்தி வரவு,செலவு கணக்கு, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை, புதிய நிர்வாகக்குழு பட்டியல் ஆகியவற்றை சங்கங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்து உரிய கட்டணம் செலுத்தி புதுப்பிக்கும் சட்டப்பூர்வ நடைமுறை உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆவணங்களை ஜூன், ஜுலை மாதங்களில் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க சிலர் சென்றனர்.
பதிவாளர் அலுவலகத்தில் பழைய கோப்புகள் எதுவும் இல்லாததால் 3 ஆண்டுகளுக்கான ஆவணங்களைக் கொண்டு வந்தால்தான் இந்த ஆண்டு புதுப்பிக்க முடியும் என்று கூறியுள்ளனர். உரிய ஆவணங்களை கொடுத்த பின்னும் ஊழியர்கள் வரவில்லை, வேறு ஊழியர் நியமனம் செய்வதில் தாமதம், மாறுதலில் சென்றவர்கள் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்று பல்வேறு காரணங்களைக் கூறி இன்றுவரை அலைக்கழித்து வருகின்றனர்.
ஓய்வூதியர் சங்கத்தினர் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வயதானவர்களும் தினசரி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். இதுகுறித்து மாவட்ட பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும், என்றார்.
பத்திரப்பதிவு துறை அலுவலர்கள் கூறும்போது,‘‘தற்போது அனைத்து பத்திரப்பதிவு நடவடிக்கைகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரப்பதிவுகளைப் பெற பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து, அதன்பின்னரே பெற வேண்டும். சார் பதிவாளர்கள் பணியிடங்கள் மட்டுமல்லாமல், அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், சக பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடுகிறது. சங்கங்களின் பதிவுகளை ஆன்லைனில் அப்டேட் ஆகியிருந்தால்தான் புதுப்பிக்க முடியும்’’ என்றனர்.