

நாகர்கோவில்: நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விசுவாசபுரத்தில் குறுகலான சாலையில் மாதம் 20 விபத்துகள் நிகழ்வதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையும், காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரையும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.
இதைப்போன்றே இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலா வாகனங்கள், கார்களும் ஏராளம் வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்லும் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலைகளாக இவை உள்ளன. சாலையின் பல இடங்களில் ஆபத்தான குழிகள் இருப்பதால் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதே வேளையில் தேசிய நெடுங்சாலைகளில் பல குறுகலான பகுதிகளில் சென்டர் மீடியன் மற்றும் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன விபத்து அதிகரித்து வருகிறது.
நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விசுவாசபுரம் அருகே குமரன் புதூர் சந்திப்பில் தொடங்கி கிறிஸ்துநகர் நிறுத்தம் வரை சாலையின் நடுவே சென்டர் மீடியன் வைக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட சிமென்ட் தடுப்புகளால் சாலையின் அகலம் மிகவும் குறுகியதாக உள்ளது.
இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளது. நடந்து செல்வோரும் உயிரை கையில் ஏந்தியவாறு இங்கு ஆபத்தான சூழலில் பயணிக்கின்றனர். டிவைடர் இருந்த போதிலும் இவ்வழியாக செல்லும் பெரும்பாலான வாகனங்கள் வேகமாகவே கடந்து செல்கின்றன.
மேலும் சாலையில் செல்வோர் கனரக வாகனங்கள் வரும்போது பக்கவாட்டில் ஒதுங்க முடியாத நிலை உள்ளதால் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இங்கு மாதந்தோறும் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடக்கின்றன. விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப்பட்ட டிவைடர்களே விபத்துகளை உருவாக்கிடும் பரிதாபம் நிகழ்ந்து வருகிறது.
குறிப்பிட்ட இரு பகுதிகளிலும் டிவைடர் தொடங்கும் மற்றும் முடியும் இடங்களில் பேருந்து நிறுத்தம் உள்ளதால் சாலையில் பேருந்துகள் நிறுத்தும் போது பின்னால் வரும் வாகனங்கள் பக்கவாட்டில் செல்ல முடியாததால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க இயல்வதில்லை. இத்தகைய காரணங்களால் இங்கு விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதனை தடுத்திடும் வகையில் பயணிகள், வாகனத்தில் வருவோர் மற்றும் பொதுமக்களின் உயிரை காக்கும் வகையில் விசுவாசபுரம் பகுதியில் குறுகலான பகுதியில் உள்ள டிவைடர்களை அகற்றி போக்குவரத்து போலீஸாரை கண்காணிக்க நியமிக்கவேண்டும். அல்லது வாகன போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்படாத வகையில் இங்கு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.