

பொள்ளாச்சி: சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அகில தாந்தரி பிரச்சார சபையின் மாநில பொதுச்செயலாளர் சிவசண்முக சுந்தர அடிகளார் தெரிவித்தார்.
அகில தாந்தரி பிரச்சார சபை மற்றும் விவேகானந்த சேவை மையம் ஆகியவற்றின் சார்பில் சனாதன தர்ம விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்க விழா பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோயில் முன்பு நேற்று நடைபெற்றது. இதில் சிவசண்முக சுந்தர அடிகளார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்து சனாதன தர்மத்தை வழி நடத்துக்கின்ற வகையில் சனாதன விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் அமைச்சர்கள் முதலில் இந்து என்ற வார்த்தையை எதிர்த்தார்கள். தற்போது சனாதனம் என்னும் வார்த்தையை எதிர்க்கிறார்கள்.
இந்து சனாதன தர்மம் என்பது அனைத்து உயிர்கள் மீதும் பற்று கொண்டது. அனைத்து உயிர்களின் உருவத்திலும் கடவுள் காட்சியளிக்கிறார். சனாதனம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு அனுமதியுடன் நடத்துவோம்.
அரசு தனக்கு இருக்கும் கடமைகளை விட்டு விட்டு இந்து சமுதாயத்தை குறை கூறிக்கொண்டு ஒடுக்குகின்ற சூழ்நிலைக்கு செல்லாமல் அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து செல்கின்ற வகையில் செயல்பட வேண்டும். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பிற மதத்தினர் கூறுவது கிடையாது. சனாதனத்தை ஒழிக்க முடியாது. சனாதனம் என்பது இந்து, இந்து என்பது சனாதனம் ஆகும்.
சனாதனம் என்றால் என்ன? இறை வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழகம் முழுவதும் இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.